அகதிகள் முகாமில் உக்ரேனிய சிறுமியை குதூகலிக்கவைத்த தன்னார்வலர்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?
ரஷியாவின் கொடூர தாக்குதலால் உருக்குலைந்து போயிருக்கும் உக்ரைனில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ருமேனியா அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ள உக்ரைன் சிறுமி ஒருவரின் பிறந்தநாளை ருமேனிய மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரினா என்ற அந்த உக்ரேனிய சிறுமி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ருமேனியாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அங்கு உக்ரைனிலிருந்து வரும் அகதிகளுக்கு பல தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர். இந்நிலையில் சிறுமி அரினாவுக்கு 7வது பிறந்தநாள் என்ற செய்தியை கேள்விப்பட்ட தன்னார்வலர்கள், அரினாவுக்கு பரிசுகள் மற்றும் பலூன்கள் வழங்கியும், பிறந்தநாள் பாடல் பாடியும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வீடியோ குட்நியூஸ் மூவ்மெண்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.
அதில் “மனிதநேயம்... ஒரு அகதிகள் முகாமில் உக்ரேனிய சிறுமியின் 7வது பிறந்தநாளில் ருமேனியா ஒன்றிணைந்தது... நாம் அனைவரும் அரினாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம். உதவியவர்களுக்கு நன்றி ” என பதிவிடப்பட்டுள்ளது.




