எயர் அரேபியா விமானச் சக்கரத்தில் இருந்த சடலம் ; விசாரணையில் வெளியான தகவல்
லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 16ஆம் திகதி மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்து கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த ‘எயர் அரேபியா’ (Air Arabia) விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

விமானத்தை பரிசோதித்துக் கொண்டிருந்த தரைக்கட்டுப்பாட்டு பொறியாளர் ஒருவர் சடலத்தை கண்டுபிடித்ததையடுத்து, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஹார்ஷாம் (Horsham) மரண விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியின் மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர் (Joseph Turner) முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
அதன்படி, ஹைபோக்சியா (Hypoxia – உடலுக்கு போதியளவு ஒட்சிசன் கிடைக்காத நிலை), ஹைபோதெர்மியா (Hypothermia – உடல் வெப்பநிலை கடுமையாகக் குறைதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் சக்கரப் பகுதி பயணத்தின் போது கடுமையான குளிர் மற்றும் குறைந்தளவிலான ஒட்சிசன் கொண்ட சூழலாக இருந்திருக்கலாம் என மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதாகக் கருத முடியாததற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.