ரஷ்ய குண்டுவீச்சில் சிதைந்த குடியிருப்பு: வெளியே கண்ணீருடன் காத்திருக்கும் பெண்
ரஷ்ய குண்டுவீச்சில் தரைமட்டமான குடியிருப்பில் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பெண் ஒருவர் கண்ணீருடன் காத்திருக்கும் புகைப்படம் நெஞ்சை உலுக்கியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமையில் Borodyanka என்ற கிராமத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. நாற்காலி ஒன்றில் பெண் ஒருவர் அமர்ந்து காத்திருக்கிறார், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
சுமார் 3 நாட்கள் அவர் அப்பகுதியில் காத்து நின்றதாகவும், மீட்பு குழுவினரே குறித்த பெண்மணிக்கு நாற்காலி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 1ம் திகதி ரஷ்ய துருப்புகளால் குறித்த குடியிருப்பு வளாகம் குண்டுவீச்சுக்கு இலக்காகியுள்ளது. மட்டுமின்றி மீட்பு நடவடிக்கைகளை ரஷ்ய துருப்புகள் தடுத்த நிலையில், ஒரு வாரமாக இடிபாடுகளில் மக்கள் புதையுண்ட நிலையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது 26 சடலங்களை மீட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் நகர நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாம் ஏதும் சுற்றுவட்டாரத்திலேயே தென்படாத நிலையில், ரஷ்ய துருப்புகள் வேண்டும் என்றே அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக நகர நிர்வாகி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.