ஓட்டப் போட்டியில் வெற்றி:தேசிய விடுமுறை அறிவித்த நாடு
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப்பதக்கம் வென்றதன் காரணமாக போட்ஸ்வானாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் போட்ஸ்வானா வரலாற்று சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இதனை முன்னிட்டு, அந்த நாட்டில் எதிர்வரும் 29 திங்கள்கிழமை தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆப்ரிக்க வெற்றி என போட்ஸ்வானா நாட்டின் ஜனாதிபதி தூமா போகோ தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை நாட்டின் சுதந்திர தினத்துக்கு முன் தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.
போட்ஸ்வானா அணியின் லீ பேகெம்பிலோ எப்பி, லெட்சிலை தெபோகோ, பாயாபோ ந்தோரி, புசாங் கொலன் கெபினட்சிபி ஆகியோர் இந்த வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 10 தடவைகள் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க அணியை வெற்றி கொண்டனர்.
இந்தப் போட்டியில் தென் ஆப்ரிக்கா மூன்றாம் இடத்தை பெற்றது. போட்ஸ்வானாவின் இயற்கை வைரங்கள் தரையில் மட்டுமில்லை, உலக சாம்பியனான எங்கள் விளையாட்டு வீரர்களும் அப்படியே பிரகாசிக்கிறார்கள் என ஜனாதிபதி போகோ தெரிவித்துள்ளார்.
இந்த சாம்பியன்ஷிப்பில், போட்ஸ்வானா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்று, மொத்த பதக்க அட்டவணையில் ஐந்தாவது இடத்தை பிடித்ததுள்ளது.