சேதமடைந்த வீடு... கனடாவில் மொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய 8 வயது சிறுவன்
ஒட்டாவா பகுதியில் வீடு தீ விபத்தில் சிக்கிய நிலையில், 8 வயது சிறுவனின் சமயோசித முடிவால் குடும்பம் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஒட்டாவா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு வீட்டின் கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்று பலமாக வீசியதால், நெருப்பு பக்கத்து குடியிருப்பிலும் படர்ந்துள்ளது. குறித்த குடியிருப்பானது Whitney மற்றும் Sean Toogood ஆகியோரது என தெரிய வந்துள்ளது.
சம்பவத்தின் போது தங்கள் பிள்ளைகள் இருவருடன் இவர்கள் தூக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென்று இவர்களின் மகன் Mason தம்மால் தூங்க முடியவில்லை எனவும் கெட்ட வாடையாக இருக்கிறது எனவும் பெற்றோரை எழுப்பியுள்ளான்.
சுதாரித்துக்கொண்ட Sean Toogood உடனடியாக தரைத்தளத்திற்கு வந்து சுற்றும் பார்வையிட்டுள்ளார். அப்போதே அவர் கண்களில் அந்த காட்சி தெரிந்துள்ளது.
அதிர்ச்சியில் உறைந்து போன அவர் உடனடியாக தமது மனைவியை தூக்கத்தில் இருந்து எழுப்பியதுடன், நால்வரும் செல்லப்பிராணிகளுடன் வெளியேறியுள்ளனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென மொத்த குடியிருப்பிலும் படர்ந்துள்ளது.
தங்களின் மகன் அந்த வேளை எழுப்பியதாலையே தற்போது மொத்த குடும்பமும் உயிருடன் இருப்பதாக Whitney கண்கலங்கியுள்ளார். அவர்களின் குடும்ப வீடு மொத்தமாக சேதமடைந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் போரடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தற்போது செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஹொட்டல் ஒன்றில் Whitney குடும்பம் தங்கி வருகிறது.