அமேசான் காட்டில் மாட்டிக்கொண்ட சிறுவர்கள்; நான்கு வாரங்களின் பின் உயிர் தப்பிய அதிசய சம்பவம்
அமேசான் மழைக்காட்டில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் நான்கு வாரங்களுக்கு வெறும் மழைநீரை மட்டுமே குடித்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
8 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போன நான்கு வாரங்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 18 அன்று, க்ளீசன் ஃபெரீரா (Gleison Ferreira) மற்றும் அவனது மூத்த சகோதரன் கிளாக்கோ (Glauco) ஆகியோர் அமேசானாஸ் மாநிலம், மணிக்கோர் அருகே உள்ள காட்டில் தொலைந்து போனார்கள்.
இந்த 2 சகோதரர்களும் வீடு திரும்பும் போது, அவர்கள் கண்ணில் தென்பட்ட சிறிய பறவைகளைப் பிடிக்க சென்ற போது காட்டிற்குள் வழியை தவறவிட்டுள்ளனர்.
இருவரும் தொலைந்து போன பிறகு, கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் வாழ கடுமையாக போராடி உள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இந்த சகோதரர்கள் காட்டில் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வெறும் மழைநீரை மட்டுமே குடித்து உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொதுவாகவே, அமேசான் காடுகளில் தேடுதல் பணி மிகவும் கடினமானதாக இருக்கும். தற்போது அமேசான் காட்டில் இது மழைக்காலம் என்பதால், காணாமல் போன சிறுவர்களை தேடும் பணி மேலும் கடினமானதாக மாறியது.
இந்நிலையில் காணாமல் போன சிறுவர்கள் கொடூரமான அமேசான் காட்டையும், மழையையும் சமாளிப்பார்களா என்கிற அச்சமும் மேலோங்கியது.
ஆனால் இதே மழை தான் காணாமல் போன சிறுவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக மாறி, அவர்கள் உயிர்பிழைக்க காரணமாக இருந்தமை வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.