கனடியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை
கனடிய பிரஜை ஓருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 17 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக, கனடாவின் பிராம்ப்டன் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
63 வயதான குராம்ரித் சித்து என்ற நபர், அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு போதைப்பொருள் கடத்தும் சர்வதேச நெட்வொர்க்கை வழிநடத்தி வந்துள்ளார்.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஏ. குரோன்ஸ்டாட் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.
அமெரிக்காவில் மொத்தமாகப் போதைப்பொருட்களை கொள்வனவு செய்யும் சித்து, அவற்றை நீண்ட தூரம் செல்லும் லாரிகள் மூலம் கனடாவிற்குள் கடத்தி வந்துள்ளார்.
குறிப்பாக, கடந்த 2022 செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 24 வரையிலான வெறும் ஒரு மாத காலத்திற்குள், 523 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் 347 கிலோ கோகோயின் ஆகியவற்றை உள்ளடக்கிய 8 பெரிய போதைப்பொருள் கடத்தல்களை இவர் திட்டமிட்டு நடத்தியுள்ளார்.
போதைப்பொருளை டெலிவரி செய்யும் போது ஆட்களை அடையாளம் காண்பதற்காக, சித்து ஒரு நூதன முறையைக் கையாண்டுள்ளார்.
கடத்தலில் ஈடுபடும் கூரியர்களிடம் குறிப்பிட்ட சில தொலைபேசி எண்களையும், பண நோட்டுகளில் இருக்கும் வரிசை எண்களையும் ரகசியக் குறியீடாக வழங்கிப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தக் கடத்தல் கும்பல் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2023 பெப்ரவரி வரை இயங்கி வந்துள்ளது.
கடந்த 2024 ஜனவரியில் கைது செய்யப்பட்ட சித்து, பின்னர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார். இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட எட்டாவது நபர் சித்து ஆவார். இவருக்கு முன்னதாகக் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு 2 முதல் 9 ஆண்டுகள் வரை ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.