இந்தியா பாகிஸ்தான் மோதல் கனடாவில் வாழும் ஒரு தம்பதி மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்
கடந்த மாதம், இந்தியாவின் காஷ்மீரிலுள்ள சுற்றுலாத்தலம் ஒன்றிற்குச் சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்த, 26 பேர் பலியானார்கள்.
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள தீவிரவாத தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல், கனேடிய குடும்பம் ஒன்றிற்கு கவலையை உருவாக்கியுள்ளது.
கனடாவின் பிராம்டனில் தங்கள் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறார்கள், சதாஃப் இக்பால், ஹர்மான் சிங் தம்பதியர். சதாஃப் பாகிஸ்தான் நாட்டவர், ஹர்மான் இந்தியாவைச் சேர்ந்தவர்.
தீவிரவாதிகள் காஷ்மீரிலுள்ள பஹல்காம் என்னுமிடத்தில் சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய விசாக்களை ரத்து செய்துவிட்டது.
சதாஃபும் ஹர்மானும் தங்கள் உறவினர்களை சந்திக்க இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் செல்வதுண்டு.
அடுத்த ஆண்டு வாக்கில் இருவரும் குடும்பத்துடன் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் காரணமாக தங்கள் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள் தம்பதியர்.
தம்பதியர் இருவருக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களும் உண்டு. இரு நாட்டவர்களின் பண்டிகைகளின்போதும் அனைவரும் கூடி பண்டிகை கொண்டாடி மகிழ்வதுண்டு.
நான் அவரைத் திருமணம் செய்தபோது, அவர் சீக்கியர் என்றோ, இந்தியர் என்றோ நான் பார்க்கவில்லை, நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம் அவ்வளவுதான் என்கிறார் சதாஃப்.
எங்கள் பிள்ளைகளுக்கும் மத வித்தியாசங்கள் எல்லாம் தெரியாது, அன்பு மட்டுமே தெரியும் என்கிறார் அவர்.
இந்த தம்பதியர் மட்டுமல்ல, ப்ராம்டனில் வாழும் பலரும், இரு நாடுகளுக்குமிடையில் விரைவில் அமைதி ஏற்படவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.