ஏளனம் செய்த டிரம்புக்கு பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்
பிரிக்ஸ் அமைப்பு காணாமல் போய்விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் பிரிக்ஸ் நாடுகள் உறுதியாக உள்ளதாக பிரேசில் அதிபர் லூலா டா சில்வா கூறியுள்ளார்.
BRICS என்ற சொல்லாடல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் சுருக்கம் ஆகும். அந்த அமைப்பில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
பிரேசில், ரஷ்யா இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்க நாடுகளைத் தவிர எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் உள்ளன.
சவூதி அரேபியா உறுப்பு நாடாக இணைய பரிசீலித்து வருகிறது.
2023-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, டாலருக்கு மாற்றாக வேறு ஒரு பண மதிப்பில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியிருந்தார்.
இதனை மற்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டு அதனை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டெனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்றை கொண்டு வர நினைத்தால், அந்நாடுகள் மீது 150 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும், தற்போது பிரிக்ஸ் அமைப்பு மரணித்து விட்டது எனவும் ஏளனம் செய்திருந்தார்.
டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பிரிக்ஸ் நாடுகள் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு எச்சரிக்கை, டாலருக்கு மாற்றை கொண்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்தாது என கூறியுள்ளார்.
டாலரை தான் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்தால், அது அந்நாட்டுக்கே தீங்கிழைக்கும் என ஏற்கெனவே ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.
தற்போது ஐரோப்பிய நாடுகள், யூரோ என்ற பணத்தின் மூலம் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. ரஷ்யா- சீனா இடையே, 95 சதவிகித வர்த்தகம் அந்நாடுகளின் ரூபிள் மற்றும் யுவானில் நடைபெறுகின்றன.
அர்ஜென்டினா, பிரேசில், கானா, மலேசியா உள்ளிட்ட நாடுகளும் தங்கள் பணத்தின் மூலமாகவே பெரும்பான்மையான வணிகத்தை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.