உச்சம் தொட்ட மசகு எண்ணெய் விலை ; உலக சந்தையில் அதிரடி மாற்றம்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் மசகு எண்ணெய் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

அதேபோல், சர்வதேச சந்தைக்கான ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து, ஒரு பீப்பாய் 112.78 டொலராகப் பதிவாகியுள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளை அழிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையே இந்த திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அத்துடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்துத் தடைகளை வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர் பதற்றம் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய வர்த்தக முடிவில் S&P 500 மற்றும் Nasdaq ஆகிய இரண்டு முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.