உக்ரைன் போரில் மறைமுகமாக ஈடுப்படும் பிரித்தானியா; குற்றஞ்சாட்டிய ரஷ்யா!
உக்ரைன் போரில் பிரித்தானியா மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளதுடன், விளாடிமிர் புடினின்(Vladimir Putin) போர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் வகுத்ததாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தூதர் ஆண்ட்ரி கெலின்(Andrei Kelin) இது தொடர்பாக குறிப்பிடுகையில், சர்ச்சைக்குரிய கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் துறைமுகத்தின் மீது பிரித்தானிய கடற்படை ட்ரோன் தாக்குதலுக்கு காரணமாக செயல்பட்டது எனவும், தங்களிடம் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே நிலை தொடரும் எனில் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், தங்களிடம் சிக்கியுள்ள ஆதாரங்களை பிரித்தானியாவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மிக விரைவில் அவை வெளியிடப்படும் என்றார்.
பிரித்தானிய நிபுணர்கள் தரப்பு திட்டமிட்டு, அதை உக்ரைன் செயல்படுத்தியுள்ளதாக கூறும் ஆண்ட்ரி கெலின்(Andrei Kelin), ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதலை முன்னெடுக்க பிரித்தானியா உதவியுள்ளது இதனால் அம்பலமாகியுள்ளது என்றார்.
பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரி கெலின்(Andrei Kelin) தெரிவிக்கையில், உக்ரைன் போரில் பிரித்தானியா தற்போது மறைமுகமாக களமிறங்கியிருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
உக்ரைன் போர் அடுத்த கட்டத்திற்கு செல்வதை ரஷ்யா ஒருபோதும் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், ரஷ்யா எப்போதும் பொறுமை காப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆக்கிரமிப்பு கிரிமியா பகுதியில் அமைந்துள்ள செவாஸ்டோபோல் துறைமுகத்தில் திடீரென்று முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மூன்று ரஷ்ய போர் கப்பல்கள் சேதமடைந்தன.
நீருக்கடியில் இயங்கக்கூடிய kamikaze ட்ரோன் விமானத்தை பயன்படுத்தியே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாக்குதலுக்கு மூல காரணம் பிரித்தானியா எனவும், பிரித்தானியாவின் சிறப்பு குழு ஒன்று இதன் பின்னணியில் இயங்கியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏற்கனவே, பிரச்சனைக்குரிய நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை சேதப்படுத்தியது பிரித்தானியா தான் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தற்போது ட்ரோன் தாக்குதலுக்கு பின்னணியில் பிரித்தானியா செயல்பட்டதாக தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.