சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் துன்பெர்க் லண்டனில் கைது
பிரித்தானிய தலைநகர் லண்டனின் மத்திய பகுதியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது, சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம், லண்டனின் முக்கிய நிதி மையமான ‘ஸ்கொயர் மைல்’ பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனம் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு காப்புறுதி வழங்கும் ஆஸ்பென் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
“பாலஸ்தீன கைதிகளுக்கான நீதியை” வலியுறுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக அமைப்பு கூறியது.

போராட்டம் ஆரம்பித்த பின்னர் கிரெட்டா துன்பெர்க் அங்கு வந்ததாகவும், “நான் பாலஸ்தீன ஆக்ஷன் கைதிகளை ஆதரிக்கிறேன். இன அழிப்பை எதிர்க்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையை அவர் ஏந்தியிருந்த வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போரை கிரெட்டா துன்பெர்க் “இன அழிப்பு” என பலமுறை விமர்சித்துள்ளதுடன், இஸ்ரேலின் முற்றுகையை உடைக்க முயன்ற கடற்படை பிரச்சாரங்களிலும் இரு முறை பங்கேற்றிருந்தார்.
கிரெட்டா துன்பெர்க் 2000 ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்பு சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்பான Palestine Action அமைப்புக்கு ஆதரவாக பதாகை காட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக லண்டன் பொலிஸாரினால் உறுதிப்படுத்தியது.
Palestine Action அமைப்பை பிரித்தானிய அரசு “தீவிரவாத அமைப்பு” என அறிவித்துள்ளது.
இந்த போராட்டம், தற்போது பிரித்தானிய சிறைகளில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் Palestine Action அமைப்பைச் சேர்ந்த ஐந்து செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போராட்டத்தின் போது அருகிலுள்ள இடத்தில் தங்களை ஒட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.