பிரித்தானிய பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்; குவியும் ஆதரவு
பிரித்தானியாவில் 45 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், பிரித்தானிய அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியுள்ளதுடன் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் அடிபடுகிறது.
பிரித்தானியாவின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ், பிரித்தானியாவின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டார்.
அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய வரவு செலவு திட்டம் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரித்தானிய பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை. மாறாக, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இராஜினாமா முடிவையும் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பின்போது புதிய பிரதமருக்கான தேர்தல் அடுத்த வாரத்துக்குள் நடைபெறும் என்றும் லிஸ் ட்ரஸ் அறிவித்தார்.
அதனடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரித்தானிய பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரே போட்டியிடவுள்ளனர்.
குவியும் ஆதரவு
போட்டி கடுமையாக இருந்தாலும், அந்த நால்வரில் ரிஷி சுனக்கே முன்னிலை வகிப்பதாக கூறப்படுகின்றது. யூ-கோவ் என்ற மீடியா நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் வர வேண்டும் என்று 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sky Bet அறிக்கையிலும் ரிஷி சுனக்கே முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை முன்னதாக, லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும்போதே ரிஷி சுனக் அப்பதவிக்கு போட்டியிட்ட நிலையில் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் மீண்டும் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் இன் பெயர் அடிபடுகிறது.
அதேவேளை ரிஷி சுனக் இம்முறை வெற்றி பெற்றால், இங்கிலாந்து பிரதமர் பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெறுவார்.