சுவீடனில் ஆசிரியைகளை கொடூரமாக கொன்ற மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
சுவீடன் நாட்டில் 2 ஆசிரியைகளை கொடூரமாக கொன்ற மாணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சுவீடன் நாட்டில் மால்மோ நகரில் உள்ள லத்தீன் கலைப் பள்ளிக்கூடத்தில் கடந்த மார்ச் மாதம் 18 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவன், 2 ஆசிரியைகளை கத்தியாலும், கோடாரியாலும் கொடூரமாக தாக்கி படுகொலை செய்தான்.
இந்த சம்பவம்,சுவீடன் நாட்டை அதிர வைத்தது. இந்த சம்பவம் இடம்பெற்றபோது 50 மாணவர்கள் தங்களை வகுப்பறைகளில் பூட்டிக்கொண்டனர். அதன்பின்னர் கைதான பாபியன் செடர்ஹோம் என்ற அந்த மாணவன் கைது செய்யப்பட்டு அவன் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அவன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவனுக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.
தீர்ப்பில், "இந்தக் கொலைகள் இரண்டும் மிகக்கொடூரமானவை. அங்கு பாதிக்கப்பட்டவர்கள், மிகப்பெரிய அளவில் துன்பப்பட்டனர். மரண பீதியை அனுபவித்தனர்" என நீதிபதி ஜோஹன் கவர்ட் (Judge Johan Kvart) கூறி உள்ளார்.
அதேவேளை சுவீடன் நாட்டில் ஆயுள் சிறைத்தண்டனை என்பது குறைந்தது 20 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.