கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைப்பு
கனடா அரசு அடுத்த சில ஆண்டுகளில் நாட்டில் அனுமதிக்கப்படும் தற்காலிக குடியிருப்பாளர்களின் (Temporary Residents) எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் 3.85 லட்சம் தற்காலிக குடியிருப்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் எனவும் இது 2025 இலக்கை விட சுமார் 43% குறைவு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த இரு ஆண்டுகளிலும் இந்த எண்ணிக்கை 3.7 லட்சமாக இருக்கும். கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட குடியேற்றத் திட்டத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 25% குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா தற்போது தனது திறனை மிஞ்சிய அளவில் புதிய குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொண்டுள்ளது என நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பெயின் தெரிவித்துள்ளார்.
இனி நாங்கள் ‘நிலைத்திருக்கக்கூடிய அளவில்’ குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
2025க்குள் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏற்கனவே பாதியாகக் குறைந்துள்ளது.
2024-ஐ ஒப்பிடும்போது சர்வதேச மாணவர் வருகைகள் 60% குறைந்துள்ளன. அகதி கோரிக்கைகளும் சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளிலும் 3.8 லட்சம் நிரந்தர குடியேற்றவாசிகள் ஏற்கப்படும். அதே சமயம், அரசு பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப திறமையான குடியேற்றவாசிகளை ஈர்ப்பதற்காக கவனம் செலுத்தவுள்ளது.
நிரந்தர குடியேற்றப் பிரிவில் பொருளாதார குடியேற்றவாசிகளின் விகிதம் 59% இலிருந்து 64% ஆக உயர்த்தப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடியர்களில் 56% பேர் "கனடா அதிகமான குடியேற்றவாசிகளை ஏற்கிறது" என்று நம்புகிறார்கள் என அண்மைய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் அரசு குடியேற்றக் கொள்கையை மறுசீரமைத்து வருகிறது. அதோடு, அரசு அமெரிக்கா H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு விரைவான குடியேற்ற பாதையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டம் தொழில்நுட்பத் துறையில் சிறப்பு திறமைகள் கொண்டவர்களை கனடாவிற்கு ஈர்க்கும் நோக்கில் அமையும் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், Migrant Rights Network என்ற மனித உரிமை அமைப்பு இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.
இது அகதிகளுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான அதிர்ச்சியான தாக்குதல். வீட்டு விலை உயர்வு, சுகாதார நெருக்கடி, குறைந்த ஊதியம் போன்ற பிரச்சனைகளுக்காக அரசுகள் தங்களது தோல்வியை மறைக்க புதியவர்களை குற்றம் சாட்டுகின்றன,” என அந்த அமைப்பின் பிரதிநிதி சயீத் ஹுச்சேன் தெரிவித்துள்ளார்.