நாயால் கீழே விழுந்தவரின் உயிரைப் பறித்த பேருந்து
காலி - கொழும்பு வீதியில் தடல்ல மயானத்துக்கு அருகில் தந்தை மற்றும் மகன் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தடல்ல வலவத்தையைச் சேர்ந்த சுதத் நிஹால் (59) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மகன் மருத்துவமனையில்
உயிரிழந்தவர் தனது 32 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, தடல்ல மயானத்துக்கு அருகில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளை நோக்கிப் பாயந்தபோதே கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் கீழே வீழ்ந்துள்ளது.
இதன்போது, பின்னால் வந்த காலி - கொழும்பு தனியார் பஸ் வீதியில் வீழ்ந்த நபரை மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ள் நிலையில் மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பஸ்ஸின் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.