ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ; போலந்து நாட்டினர் 12 பேர் பலி
ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் போலந்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஹங்கேரியின் மெசோகெரெஸ்டெஸ் நகருக்கு அருகில் 57 பயணிகளுடன் போலந்து பதிவெண் கொண்ட சுற்றுலா பஸ் ஒன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாரதி சோர்வு மற்றும் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்பதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிர் தப்பிய சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஹங்கேரி மற்றும் போலந்து தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், நீண்ட தூர இரவு மற்றும் அதிகாலைப் பயணங்களில் சாரதிகளின் சோர்வு மற்றும் தூக்கக் கலக்கம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
சாரதிகள் தூக்கக் கலக்கத்தை உணரும்போது வாகனம் செலுத்துவதைத் தவிர்த்து, போதிய ஓய்வு எடுத்த பின்னரே பயணத்தைத் தொடர வேண்டும் என போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு சில விநாடிகளுக்கான தூக்கக் கலக்கம்கூட பாரிய விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இரவு மற்றும் அதிகாலை நேரப் பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும்.