யாழில் இளைஞன் செய்த மோசமான செயல்; சுற்றிவளைத்த மக்கள்!
யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கு பகுதியில் யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இளைஞனின் வீட்டை கிராம மக்கள் சுற்றிவளைத்து, இளைஞனை நையப்புடைத்தனர்.
இச் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இளைஞன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைஞனின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்
இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்தது. நீர்வேலி தெற்கு சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞன் ஒருவர் யுவதியொருவரை காதலித்துள்ளார். அவர்களிற்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, யுவதியின் நிர்வாண புகைப்படத்தை இளைஞன் பேஸ்புக்கில் பதிவேற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்றிரவு 11 மணியளவில் அங்கு திரண்டு இளைஞனின் வீட்டை சுற்றிவளைத்தனர். சுமார் 30 வரையான மக்கள் அங்கு திரண்டிருக்கலாமென கருதப்படுகிறது.
கிராம மக்கள் வீட்டுக்குள் நுழைந்து இளைஞனை நையப்புடைத்துள்ளனர். இளைஞனின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தனர். இது தொடர்பில் 119 அவசர இலக்கம் மூலம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த பொலிசார் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது, பொலிசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அச்சுவேலி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.
பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பொலிசார் ஒருவரும் காயமடைந்துள்ளார்.