துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தம்மை கடத்தியதாக கூறி நாடகமாடிய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ல் ஜாகிங்கிற்கு வெளியே சென்ற போது இரண்டு ஹிஸ்பானிக் பெண்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக 39 வயதான ஷெர்ரி பாபினி என்பவர் கூறி வந்தார்.
ஆனால் அவரது கூற்றுகள் உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்ட நிலையில், திங்களன்று அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு சட்டத்தரணிகள் அதிகபட்சமாக 8 மாதங்கள் சிறை தண்டனைக்கு கோரியுள்ள நிலையில், மாவட்ட நீதிபதி 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், இது போன்ற நடவடிக்கைகள் இனி எவரும் முன்னெடுக்காமல் இருக்க வேண்டும் என்றார்.
மேலும், எதிர்வரும் நவம்பர் 8ம் திகதிக்குள் ஷெர்ரி பாபினி சரணடைய வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 18 மாத சிறைக்கு பின்னால் 3 ஆண்டுகள் அவர் கண்காணிப்பில் வைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
2016ல் திடீரென்று ஷெர்ரி பாபினி மாயமானார். 3 வாரங்களுக்கு பின்னர் திரும்பி வந்த அவர், தம்மை இரண்டு ஹிஸ்பானிக் பெண்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியதாக்வும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். தாம் கடத்தப்பட்டதாக நாடகமாடிய அந்த மூன்று வாரமும் தமது முன்னாள் காதலருடன் தங்கியிருந்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ஏப்ரல் மாதம் கணவர் கீத் விவாகரத்து கோரியுள்ளதுடன், தமது இரு பிள்ளைகளும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஷெர்ரி பாபினி கூறிவந்த பொய் காரணமாக அவருக்கு அளிக்கப்பட்டுவந்த உதவித் தொகை மொத்தமும் திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.