கம்போடியாவில் பேருந்து விபத்து: 16 பேர் பலி
கம்போடியாவின் மத்திய பகுதியில் பயணித்த இரவு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட துயரமான விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
37 பயணிகளுடன் ஒடார் மீன்சே மாகாணத்திலிருந்து தலைநகர் பினோம் பேனர் நோக்கி சென்ற பேருந்து, வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் காம்போங் தோம் மாகாணத்தில் உள்ள ஒரு பாலத்திலிருந்து கீழே உள்ள கால்வாயில் பாய்ந்தது. இந்த தகவலை கம்போஜா நியூஸ் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை ஆரம்ப விசாரணையில், இரவு நேர மாற்று ஓட்டுநர்களில் ஒருவரான ஓட்டுநர் சம்பவ நேரத்தில் நித்திரை கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உயிரிழந்தவர்களில் ஒருவர் தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பேருந்து விபத்துக்கு முன், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தரும் சியம் ரீப் நகரில் கூடுதலான பயணிகளை ஏற்றியிருந்தது.
பேருந்தில் பயணித்தவர்களில் அனைவரும் கம்போடியர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் சர்சோகா பகிர்ந்த புகைப்படங்களில், பேருந்து நீரில் பாதியாக மூழ்கிய நிலையிலிருந்து கிரேன் உதவியுடன் மேலே எடுக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது.
முதல் கட்டத்தில் 13 உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், இரவு முழுவதும் நடந்த தேடுதல் நடவடிக்கைகளின் பின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
காயமடைந்தவர்கள் காம்போங் தோம் மாகாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கம்போடியாவில் 2025 முதல் ஆறு மாதங்களில் சுமார் 700 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.