மொத்தமாக பாழான கனடாவின் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்துகள்
கனடாவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்து சேமிப்பில் பாதிக்கும் அதிகமாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பெறுவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி மருந்துகள் வீணானதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி பல மில்லியன் டோஸ் நோவாவாக்ஸ் மற்றும் மெடிகாகோ தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படாமலே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ல் அஸ்ட்ராசெனகா நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 20 மில்லியன் டோஸ் மருந்துகள் பெற கையெழுத்திட்டது. இதனால், மார்ச் மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் 2.3 மில்லியன் கனடியர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றனர்.
ஆனால் 2021 வசந்த காலத்தில் இரத்தம் உறைதல் தொடர்பான சிக்கல் எழவே, கனேடிய நிர்வாகம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்பாட்டில் இருந்து விலக்கியது.
பதிலாக பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகளை மக்களுக்கு பரிந்துரைத்தனர். இதனையடுத்து ஜூலை 2021ல், மீதமுள்ள 17.7 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தது.
இதில் தற்போது 13.6 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வீணானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் மொத்த மக்கள் தொகையில் 85% பேர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.