ஈரானிலிருந்து பிஸ்தா இறக்குமதிக்கு கனடா தடை
நாட்டில் பரவி வரும் சால்மொனெல்லா தொற்று காரணமாக ஈரானிலிருந்து பிஸ்தா மற்றும் பிஸ்தா கலந்த பொருட்களை இறக்குமதி செய்வதை கனடா தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.
கனடாவின் உணவு ஆய்வு நிறுவனம் இந்த தடை குறித்து அறிவித்துள்ளது.
கனடியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
ஆய்வக பரிசோதனை
ஆய்வு மற்றும் கண்காணிப்பு தரவுகள் மதிப்பாய்வு செய்யப்படும் வரை இந்தத் தீர்மானம் நீடிக்கும் என மேலும் தெரிவித்துள்ளது.
பிஸ்தா விதைகள் மற்றும் அவற்றால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களே சால்மொனெல்லா பரவலுக்குக் காரணமாக உள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டமை ஆய்வக பரிசோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்கத்திற்கு உள்ளான பல உணவுப் பொருட்கள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இனிமேல் கனடாவிற்கு பிஸ்தா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அவற்றின் மூலப்பொருள் ஈரானிலிருந்து அல்ல என்பதைக் கட்டாயமாக நிரூபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் இல்லையெனில், பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அல்லது நேரடியாக நாட்டுக்குள் அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.