உக்ரைனுக்காக களமிறங்கும் கனடாவும் ஐரோப்பாவும்: ட்ரூடோ அறிவிப்பு
உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு சர்வதேச அளவில் நிதி திரட்டும் முடிவுக்கு கனடாவும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்து செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது கடந்த 30 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என கூறி களமிறங்கிய ரஷ்யா, தற்போது முதற்கட்ட சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது என அறிவித்துள்ளது.
ஆனால், எதிர்வரும் மே 9ம் திகதி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் திட்டமும் ரஷ்யாவிடம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியம் நிதி திரட்ட திட்டமிட்டு, அறிவிப்பும் செய்துள்ளது.
சர்வதேச சமூகத்திடம் இருந்து நிதி திரட்டும் இந்த திட்டத்தில் தற்போது கனடாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த முடிவை ஏப்ரல் 9ம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா ஆகியோர் கூட்டாக அறிவிக்க உள்ளனர். இது தொடர்பில் பிரதமர் ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
ரஷ்ய துருப்புகளால் முற்றாக சிதைக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக பெரிய அளவிலான சமூக ஊடக பேரணியில் பங்கேற்க இசைக்கலைஞர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டத்தின் நோக்கம், பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மில்லியன் கணக்கான அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த உக்ரேனியர்களுக்கு உதவ பணம் திரட்டுவதே என தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.