தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை
கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo, 55) என்பவர் தனது காதலியுடன் உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

உணவகம் சென்றுவிட்டு தன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சாகூ வந்தபோது, அங்கு ஒருவர் தனது கார் மீது சிறுநீர் கழிப்பதைக் கவனித்துள்ளார் அவர்.
என்ன செய்கிறாய் என சாகூ கேட்க, என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அந்த நபர் கூறியதுடன், சாகூவை தலையில் தாக்கியுள்ளார்.

சாகூ கீழே விழ, அவரது காதலி அவசர உதவியை அழைத்துள்ளார். அவசர உதவிக்குழுவினர் வரும்போது சாகூ சுயநினைவின்றிக் கிடந்துள்ளார்.
உடனடியாக சாகூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றாலும், சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களுக்குப் பின் அவர் உயிரிழந்துவிட்டார்.
சாகூவைத் தாக்கிய Kyle Papin (40) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாகூ உயிரிழந்ததைத் தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது. Kyle Papin, நவம்பர் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.