கனடவில் ஹண்டா வைரஸ் தாக்கம் தொடர்பான புதிய தகவல்
கனடாவுக்குத் திரும்பிய 26 விமானப் பயணிகள், ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ள ஒருவருடன் பயணம் செய்துள்ளதாக கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஜோஸ் ரெய்மர் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறையினர் தற்போது அந்தப் பயணிகளைத் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய அதிகாரிகள் இந்தப் பயணிகளுக்குத் தொற்று ஏற்படுவதற்கான "வாய்ப்பு இல்லை" என்று வகைப்படுத்தியிருந்தாலும், கனடா கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

டாக்டர் ரெய்மர் இந்தப் பயணிகளை "மிகக் குறைந்த அளவிலான ஆபத்து" (Minimal, low risk) கொண்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்ட 'எம்வி ஹோண்டியஸ்' (MV Hondius) என்ற சுற்றுலா கப்பலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன் இந்த வைரஸ் பாதிப்பு தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது "குறைந்த ஆபத்து" பிரிவில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என கனடிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது ஒன்பது பேர் "அதிக ஆபத்து" (High-risk) பிரிவில் உள்ளனர்.
இவர்கள் கப்பலில் இருந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் அனைவரும் தற்போது அறிகுறிகள் ஏதுமின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கு தற்போது பரிசோதனை நடத்தப்படவில்லை. ஆரம்பக்கட்டத்தில் பரிசோதனை முடிவுகள் 'நெகட்டிவ்' என்று வந்தால், மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை அலட்சியப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸின் அடைகாக்கும் காலம் (Incubation period) 8 வாரங்கள் வரை நீடிக்கலாம். எனவே, ஒருவருக்குப் பிறகு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அறிகுறிகள் இல்லாத நோயாளி மூலம் மற்றவர்களுக்குத் தொற்று பரவும் என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் இல்லை. தற்போதைய நிலையில், ஹண்டாவைரஸ் பெருந்தொற்றாக மாறும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.