டிரம்பின் மிரட்டலுக்கு பணியாத கனடா ; கிரீன்லாந்தில் தூதரகம் திறப்பு
கனடா தனது முதலாவது இராஜதந்திர அலுவலகத்தை கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் இன்று (2026 பெப்ரவரி 06) உத்தியோகபூர்வமாகத் திறந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது "தேசிய பாதுகாப்புக்கு அவசியமானது" எனக் கூறி வருவதுடன், அதற்கு இணங்காத நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் டென்மார்க் மீது வர்த்தக வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி வருகிறார்.

கனடா மற்றும் பிரான்ஸ்
இந்தச் சூழலில் கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கிரீன்லாந்திற்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அங்கு புதிய தூதரகங்களைத் திறந்துள்ளன.
இந்தத் திறப்பு விழாவில் கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சைமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கனடாவின் முதல் சுதேச இனத்தவர் ஆளுநர் நாயகம் மேரி சைமன், கனடா மற்றும் கிரீன்லாந்துக்கு இடையிலான கலாசார மற்றும் இன ரீதியான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடிய கடலோர காவற்படை கப்பல் ஒன்றுடன் அதிகாரிகள் குழு நூக் நகருக்குச் சென்றுள்ளது. இது கிரீன்லாந்தின் இறையாண்மைக்குக் கனடா வழங்கும் ஆதரவின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அதேவேளை டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களிலிருந்து கிரீன்லாந்தைப் பாதுகாக்க டென்மார்க் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாது இதேபோன்ற விமர்சனங்களை அவர் கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியம் குறித்தும் முன்வைத்துள்ளார். ஆர்க்டிக் பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக கனடா 1 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு முழுவதும் இராணுவப் பிரசன்னத்தை உறுதி செய்யப் பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதுவரை ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்கா மட்டுமே கிரீன்லாந்தில் தூதரகங்களைக் கொண்டிருந்த நிலையில் தற்போது கனடாவும் தூதரகத்தை திறந்துள்ளது.
அதேசமயம் இன்று கனடாவுடன் இணைந்து பிரான்ஸ{ம் தனது புதிய தூதரகத்தைத் திறந்துள்ளமை, நேட்டோ நட்பு நாடுகள் கிரீன்லாந்தின் இறையாண்மைக்கு வழங்கும் ஆதரவை உறுதிப்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.