கனடா திரையரங்கொன்றில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது தற்காலிக நிறுத்தம்
கனடாவில் திரையரங்கு ஒன்றிற்கு தீவைக்க முயற்சி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் அமைந்துள்ள Film.ca Cinemas என்னும் திரையரங்குக்கு தீவைக்க சிலர் முயற்சி செய்தனர்.
திரையரங்குகளின் வாசலில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் தீவைத்த நிலையிலும், அதிஷ்டவசமாக தியேட்டரின் உட்பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கனடாவில் இந்திய அல்லது தெற்காசிய திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இந்த தீவைப்பு முயற்சி நிகழ்ந்ததாக கருதப்படும் நிலையில், அந்த திரையரங்கின் தலைமை நிர்வாக அதிகாரியான Jeff Knoll, நாங்கள் என்ன திரைப்படங்களை திரையிட விரும்புகிறோமோ, அவற்றை திரையிடுவோம், தெற்காசிய திரைப்படங்களை திரையிட விடாமல் தடுக்க முயல்வோருக்கு அடிபணியமாட்டோம் என்று கூறியிருந்தார்.
ஆனால், நேற்று அதிகாலை 1.50 மணியளவில் மீண்டும் அந்த திரையரங்கம் தாக்குதலுக்குள்ளானது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திரையரங்கை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். தாக்குதல் நடத்தியர்கள் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டுமுறை திரையரங்கம் தாக்குதலுக்குள்ளானதால், பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Kantara: A Legend Chapter 1 மற்றும் They Call Him OG ஆகிய இரண்டு இந்திய திரைப்படங்களும் திரையிடப்படாது என அந்த திரையரங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, York Cinemas என்னும் திரையரங்கமும் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே திரைப்படத்தைக் காண முன்பதிவு செய்துள்ளவர்களின் பணம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அந்த திரையரங்கம் தெரிவித்துள்ளது.