குடியேறிகள் தொடர்பில் கனடா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
குடியேறிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று இந்த விடயம் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனடாவில் குடியேறிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் தற்பொழுது ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கம் ஆட்சியில் தொடர்தும் நீடிக்கும் நோக்கில் இவ்வாறு குடியேறிகள் கொள்கையில் திடீர் மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 395000 நிரந்தர வதிவிட உரிமையாளர்களுக்கு கனடா அனுமதி அளிக்கும் எனவும் 2026 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 380000மாக குறையும் எனவும் 2027 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 365000மாக குறையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் குறித்த எண்ணிக்கை 485000 என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிக வதிவிட உரிமையாளர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையாக குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குடியேறிகளுக்கான வாய்ப்பினை குறைக்கும் வகையில் கனடிய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
குடியேறிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் குறித்து அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.