சீனா தொடர்பில் பயண அறிவுறுத்தல் விடுத்த கனடா
சீனாவுக்கான பயண அறிவுறுத்தலை கனேடிய அரசு புதுப்பித்துள்ளது.
குறிப்பாக குவாங்டாங் மாகாணத்தில் சிக்குன்குனியா நோய் அபாயம் அதிகரித்திருப்பதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் “மேம்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கைகள்” மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிக்குன்குனியா என்பது நுளம்பு கடியினால் பரவும் வைரஸ். இதன் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், தோல் சுருக்கு, கடும் மூட்டு வலி, சோர்வு, தசை வலி, தலைவலி, வாந்தி உணர்வு, வாந்தி என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரசை பரப்பும் நுளம்புகள் பகலும் இரவும் கடிக்கக்கூடியவை என்பதால், எப்போதும் நுளம்பு கடியிலிருந்து பாதுகாப்பு அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நுளம்பு விரட்டி மருந்துகள் பயன்படுத்துதல், வெளிர் நிற நீளமான உடைகள் அணிதல், தங்கும் இடம் நன்கு மூடப்படவில்லை என்றால் நுளம்பு வலை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சிக்குன்குனியா தடுப்பூசி கனடாவில் கிடைக்கிறது எனவும் அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயணம் செல்லும் முன் சுகாதார நிபுணரிடம் தடுப்பூசி குறித்து ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.