மத்திய கிழக்கு போரில் கனடா பங்கேற்குமா ; பிரதமர் மார்க் கார்னி விளக்கம்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் நிலவரத்தில் கனடா இராணுவமாக பங்கேற்பதை முழுமையாக நிராகரிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பெராவில் ஆஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பானீஸூடன் நடைபெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலைமை மிக விரைவாக பரவி மேலும் சிக்கலாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளார்.

எந்த சூழலிலும் பங்கேற்பதை முற்றிலும் மறுக்க முடியாது. தேவையான நேரத்தில் கனடா தனது கூட்டாளிகளுடன் நிற்கும் எனவும் ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து கனடாவுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தப்படவில்லை எனுவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளில் கனடா நேரடியாக ஈடுபடவில்லை,” என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, கனடியர்களை பாதுகாப்பதும், நட்பு நாடுகள் உதவி கேட்டால் அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் கனடாவின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்திருந்த கார்னி, கனடா நேரடியாக போரில் ஈடுபடாது என இந்தியாவில் நடைபெற்ற சந்திப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.