கனடாவில் உயர் ராணுவ அதிகாரி அதிரடி நீக்கம்
லாட்வியாவில் உள்ள கனடா கூட்டு நடவடிக்கை படையின் கமாண்டராகப் பணியாற்றி வந்த கர்னல் ஜேம்ஸ் ஸ்மித், ராணுவ நீதி அமைப்பின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவரது பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கனடா கூட்டு நடவடிக்கை பிரிவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீவ் போயவின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 129-ன் கீழ், "நல்லொழுக்கம் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் கவனக்குறைவாகச் செயல்பட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு ஜேம்ஸ் ஸ்மித் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2025 மே மாதம், ஈட்டுத்தொகை மற்றும் சலுகைகளைப் பெற்றதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கனடா படைகளின் தேசிய விசாரணை அமைப்பு இந்த விசாரணையைத் தொடங்கியது.
ராணுவ நடவடிக்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்யவும், தலைமைத்துவத்தின் நம்பகத்தன்மையைப் பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் போயவின் தெரிவித்துள்ளார்.
கர்னல் ஜேம்ஸ் ஸ்மித் மீதான வழக்கு ராணுவ நீதி மன்றத்தில் நடைபெறும் நிலையில், அவர் கனடாவில் உள்ள வேறு பணிகளுக்கு மாற்றப்படுவார். அதுவரை லாட்வியா படைப்பிரிவின் இடைக்கால கமாண்டராக லெப்டினன்ட் கர்னல் ஜோயல் மேலி பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ (NATO) கூட்டணியின் ஒரு பகுதியாக லாட்வியாவில் கனடா ராணுவம் முக்கியப் பங்காற்றி வரும் சூழலில், அதன் உயர்மட்டத் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு ராணுவ வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.