அமெரிக்க தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த கனடிய பெண்
அமெரிக்க குடியுரிமை பெறாமல் மூன்று தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றத்திற்காக கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது தேர்தல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டியன் வினெட் என்ற பெண், தான் அமெரிக்கக் குடிமகள் இல்லை என்பதை அறிந்திருந்தும் மூன்று தேர்தல்களில் வாக்களித்துள்ளார்.
2022 முதன்மைத் தேர்தல், 2022 பொதுத் தேர்தல் மற்றும் 2024 பொதுத் தேர்தல் என்பனவற்றில் வாக்களித்துள்ளார்.

அவர் வாக்களித்த சமயத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது கிறிஸ்டியன் வினெட் யங் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணைக்குப் பிறகே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராகவே கருதப்படுவார் என்றும் வழக்கறிஞர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.