அமெரிக்காவை புறக்கணிக்க கனேடிய மக்கள் பலர் முடிவு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்து அவசர அவசரமாக பல நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது கனடா அரசு. ஆனால், கனேடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து போதைப்பொருட்களும், சட்டவிரோத புலம்பெயர்வோரும் அமெரிக்காவுக்குள் நுழைவதாகக் கூறி, அதனால் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக மிரட்டினார்.
பயந்துபோன கனடா அரசு, ஒருபக்கம் அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்க நாங்களும் வரி விதிப்போம் என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம், உடனடியாக எல்லை பாதுகாப்புக்காக ஏராளம் பொருட்செலவில் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது.
கனடா பயந்துபோனதைக் கண்ட ட்ரம்ப், தானும் 30 நாட்களுக்கு வரி விதிப்பைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
ட்ரம்பின் மிரட்டுலுக்கு ஏற்ப தலையாட்டுவது வேண்டுமானால், கனடா அரசின் முடிவாக இருக்கலாம். ஆனால், கனேடிய மக்கள் ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து என்ன நினைக்கிறார்கள்?
ட்ரம்பின் வரி விதிப்பை, நீண்ட நாள் கூட்டாளி ஒருவர் செய்த துரோகமாக கருதுகிறார்கள் கனேடிய மக்கள்.
இது மிக மோசமான அவமதிப்பு, தங்கள் பொருளாதாரத்துக்கு நேர்ந்துள்ள துரோகம் என கனேடிய மக்கள் கருதுகிறார்கள்.
ட்ரம்ப் வரி விதிப்பை தள்ளி வைத்தாலும், மக்கள் மன நிலைமை மாறவில்லை. அமெரிக்கா இல்லையென்றால் என்ன, நாங்கள் வேறு இடத்தில் தொழில் செய்வோம் என்கிறார்கள் கனேடிய மக்கள்.
சொன்னதுபோலவே, கனேடியர்கள் பலர், அடுத்து ட்ரம்ப் என்ன செய்வார் என்றெல்லாம் காத்திருக்காமல், தங்கள் நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டார்கள்.
நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் ரத்து, டிஸ்னி சுற்றுலா ரத்து, ஏன், கலிபோர்னியா ஒயினை ஒதுக்கிவிட்டு, உள்ளூர் பியருக்கு கூட சிலர் மாறிவிட்டார்கள்.
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் பட்டம் படிக்க விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தார் டேனியல் (Daniel Miksha, 22) என்னும் மாணவர்.
ட்ரம்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து, இப்போது, கனடாவிலேயே கல்வி கற்க விண்ணப்பித்துவிட்டார் அவர்.
மூன்று பிள்ளைகளின் தாயான மௌரீன் (Maureen Manning, 56) என்னும் பெண்ணின் குடும்பம், தாங்கள் விக்டோரியா நகரில் தயாரிக்கும் காபியை வான்கூவர் தீவுக்கு அனுப்பிவிட்டு, உள்ளூரிலேயே பொருட்களை வாங்கத் துவங்கிவிட்டது.
வழக்கமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சுற்றுலா செல்வதையும், தங்கள் மகளுடைய திருமணத்துக்காக சியாட்டிலில் உடை வாங்க வைத்திருந்த திட்டத்தையும் ரத்து செய்துவிட்டது மௌரீன் குடும்பம்.
இத்தாலி ஒயின், பின்லாந்து பட்டாசுகள், மெக்சிகோ அவகேடோ, கனேடிய பால் பொருட்கள் என்று திட்டத்தை மாற்றியதுடன், ஒரு கூட்டம் நண்பர்கள் இனி அமெரிக்காவில் ஷாப்பிங் செய்வதில்லை என முடிவு செய்துவிட்டார்கள்.
ஆக, கனேடிய அரசு ட்ரம்புக்கு தலையாட்டினாலும், தங்கள் நீண்ட நாள் நண்பனாக இருந்து துரோகியாக மாறிவிட்ட அமெரிக்காவை, கனேடிய மக்கள் மன்னிக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.