கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து
கனடாவின் நோவா ஸ்கோஷியா, என்ஃபீல்டில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஹைவே 102 வீதிப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சியாரா ரக பிக்கப் வண்டியொன்று தடுப்பை கடந்து பறந்து, எதிரே வந்த ஹோண்டா காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஹோண்டா வாகன சாரதியான கியூபெக்கைச் சேர்ந்த 51 வயதான ஆண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வாகனத்தில் பயணம் செய்த சக பயணியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மற்ற வாகனத்தில் அமெரிக்காவின் சவுத் கரொலினா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான ஆண், கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.