கனடாவில் அதிகரிக்கும் உணவுப் பற்றாக்குறை விடுக்கப்படும் எச்சரிக்கை
கனடாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் நடுத்தரக் குடும்பங்கள் கடும் உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பேரி உணவு வங்கியை நாடும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக் ஷிப்லி கவலை தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பேரி-ஸ்பிரிங்வாட்டர்-ஓரோ-மெடொன்டே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டக் ஷிப்லி, கனடாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேரி உணவு வங்கியின் மூலம் மாதத்திற்கு வெறும் 1,000 பேர் மட்டுமே உதவி பெற்று வந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை மாதத்திற்கு 8,000 ஆக உயர்ந்துள்ளது என்று டக் ஷிப்லி சுட்டிக்காட்டினார். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்டோர் இந்த உணவு வங்கியை நாடியுள்ளனர்.
இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்தார். மேலும், முதன்முறையாக உணவு வங்கியின் உதவியை நாடி வந்த புதியவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து, ஒரே மாதத்தில் 377 புதிய குடும்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"லிபரல் கட்சியின் கடந்த பத்தாண்டுகால பொருளாதாரக் கொள்கைகளால், கனடா மக்கள் ஜி7 (G7) அமைப்பில் உள்ள மற்ற நாடுகளை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிவிட்டனர்.
தற்போது ஜி7 நாடுகளில் மந்தநிலையை எதிர்கொள்ளும் ஒரே பொருளாதாரமாக கனடா மாறியுள்ளது" என்று டக் ஷிப்லி ஆளும் அரசை சாடினார்.
கனடா முழுவதும் நிலவி வரும் கடுமையான வீட்டு வாடகை உயர்வு, குடும்பக் கடன்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே மக்கள் தங்களின் அன்றாட உணவிற்குக் கூட உணவு வங்கிகளை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.