பண்டிகைக் காலப் பொருட்களைத் தெரிவு செய்ய செயற்கை நுண்ணறிவு உதவியை நாடும் நுகர்வோர்
இந்தப் பண்டிகைக் காலத்தில் தமது விருப்பத்திற்குரியவர்களுக்குப் பரிசுப் பொருட்களைத் தெரிவு செய்வதற்கும், விலைகளை ஒப்பிடுவதற்கும் கணிசமான அளவிலான மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த சோரா ரெய்ன்போல்ட் என்பவர், 'பிளாக் ஃப்ரைடே' தள்ளுபடி விற்பனையில் கிறிஸ்மஸ் ஆடைகளை வாங்குவதற்கு முன்னதாக, அவற்றின் விலை கடந்த ஆண்டுகளை விடக் குறைவாக உள்ளதா என்பதை ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' AI செயலியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
"இது நம்மைச் சற்றுச் சோம்பேறியாக்கினாலும், வேலைகளை மிகவும் எளிதாக்குகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்திற்காக அங்கஸ் ரீட் நடத்திய ஆய்வின்படி, 59 சதவீதமான கனடிய நுகர்வோர் இந்தப் பண்டிகைக் காலத்தில் பரிசுப் பொருட்களை வாங்க AI கருவிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் 46 சதவீதமானோர் பொருட்களின் விலைகளை ஒப்பிடுவதற்கும், 33 சதவீதமானோர் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், 31 சதவீதமானோர் புதிய பரிசு யோசனைகளைப் பெறுவதற்கும் AI உதவியை நாடுகின்றனர்.
பொருட்களின் இருப்பு மற்றும் விலைகளைத் தேட கிளாட், கூகுள் ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி ஆகியவற்றை மக்கள் பயன்படுத்துவதாகச் சில்லறை விற்பனை ஆய்வாளர் புரூஸ் விண்டர் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் 'மியூஸ்' போன்ற புதிய AI முகவர்கள், பயனர்களின் அனுமதியுடன் இணையத்தில் பொருட்களைத் தேடி, ஒப்பிட்டு, பணம் செலுத்தி ஆர்டர் செய்யும் வசதியையும் கொண்டுள்ளன.
இதனால், சில்லறை விற்பனை நிறுவனங்கள் தற்போது மனிதர்களை விட AI முகவர்களைக் கவரும் வகையில் தமது இணையதளங்களில் துல்லியமான தகவல்களைப் பதிவேற்றி வருகின்றன.
எனினும், அமேசான் நிறுவனம் வெளிப்புற AI முகவர்களைத் தமது தளத்தில் அனுமதிப்பதில்லை என்பதால், விலை ஒப்பீடுகள் எப்போதும் முழுமையானதாக இருப்பதில்லை. மறுபுறம், AI செயலிகளிடம் தமது வங்கி அட்டை விவரங்களை வழங்கிப் பணம் செலுத்த அனுமதிப்பதில் மக்களிடையே தயக்கம் காணப்படுகிறது.
விசா நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஆய்வில், வெறும் 4 சதவீதமான கனடியர்களே AI முகவர்கள் மூலம் நேரடியாகப் பொருட்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், 70 சதவீதமானோர் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று வாங்குவதையே விரும்புகின்றனர்.
"கடைகளுக்குச் சென்று பொருட்களை நேரில் பார்த்து வாங்குவதே மகிழ்ச்சியானது; அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க எதற்காக ஒரு ரோபோவைப் பணியமர்த்த வேண்டும்?" எனப் பல நுகர்வோர் பழைய முறையிலான ஷாப்பிங்கிற்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர்.