அமெரிக்கச் சுற்றுலா சென்ற கனேடியர்: மகளுடன் கடலில் மூழ்கி பலி
அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவரும் அவரது மகளும் கடலில் மூழ்கி பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் கால்கரியைச் சேர்ந்த யூஜி ஹு (Yuji Hu, 39) என்பவர், தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில், யூஜி குடும்பம் கலிபோர்னியாவிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளது.
திடீரென, தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த யூஜியின் 5 வயது மகளை அலை இழுத்துச் செல்ல, மகளைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளார் யூஜி.
ஆனால், அலை அவரையும் இழுத்துச் சென்றுவிட்டது. கணவனும் மகளும் கண் முன்னே அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட யூஜியின் மனைவி கடலுக்குள் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலாமல் அவர் கரைக்கே திரும்பிவிட்டிருக்கிறார்.
அந்த நேரத்தில், கடலில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு அலை எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு வந்த lifeguard ஒருவரும், மற்றொரு நபரும் கடலுக்குள் இறங்கி யூஜீயை மீட்டு கரைக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
யூஜியும் அவரது மனைவியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், யூஜி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோருடன் சென்ற 2 வயதுக் குழந்தை கடலில் இறங்கவில்லை. அந்தக் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், இரவு 9.00 மணி வரை தேடியும் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட தம்பதியின் 5 வயது மகள் கிடைக்கவேயில்லை.
சுற்றுலா சென்ற இடத்தில் தந்தையும் மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ளது.