30,000 டன் ரசாயனத்துடன் சென்ற கப்பலை பறிமுதல் செய்த ஈரான்
ஓமன் கடற்பகுதி அருகே, 30,000 டன் பெட்ரோ கெமிக்கல் சரக்குடன் சென்ற கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அஜ்மானில் இருந்து சிங்கப்பூருக்கு 30,000 டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களுடன் 'தாலாரா' என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் சென்றது.
ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி அருகே சுற்றி வளைத்த ஈரானிய கடற்படை, அக்கப்பலை ஈரான் துறைமுகத்துக்கு அழைத்தச் சென்றது.

கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்தது, ஈரானுக்கு சொந்தமான பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் என்றும், இது சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வெளிப்படையான வர்த்தக தடைகளை மீறி, சட்டவிரோதமாக கடத்தப்படும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கடல்வழி எண்ணெய் வர்த்தக பாதையாகும்.
ஈரானின் இந்நடவடிக்கை, உலகளாவிய எண்ணெய் வினியோகத்தை பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடைபெறும்போது, அமெரிக்க கடற்படை யின் ஒரு பிரிவு கண்காணிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
சட்ட நடவடிக்கையின் பேரில், இந்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதால், அமெரிக்க கடற்படை தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், கடந்த காலங்களில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை இதேபோல ஈரான் கைப்பற்றி, மேற்கத்திய நாடுகளுடன் பேரம் பேசும் ஒரு உத்தியாக ஈரான் பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.