முதல்முறையாக குண்டுவீச்சு பாணியில் சீன போா் விமானங்கள் ரோந்து
தென் சீன கடலில் முதல்முறையாக சீன ராணுவத்தின் போா் விமானங்கள் குண்டுவீச்சு பாணியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றன.
அந்தக் கடற்பகுதியில் பிலிப்பின்ஸின் கூட்டு கடற்படைப் பயிற்சிக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிராந்திய மற்றும் சா்வதேச வா்த்தகத்துக்கு தென் சீன கடல் முக்கியப் பகுதியாக விளங்குகிறது.

அந்தக் கடலின் பெரும்பாலான பகுதிக்கு சீனா உரிமை கோரி வரும் நிலையில், அந்தக் கடற்பகுதியில் தமக்கும் உரிமை இருப்பதாக பிலிப்பின்ஸ், வியத்நாம், புரூணே, தைவான் ஆகிய நாடுகளும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அந்தக் கடற்பகுதியில் அமெரிக்கா, ஜப்பான் கடற்படைகளுடன் இணைந்து பிலிப்பின்ஸ் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது.
அந்தக் கடற்பகுதியை மேற்குப் பிலிப்பின்ஸ் கடற்பகுதி என்று பிலிப்பின்ஸ் அழைக்கிறது.
இந்தப் பயிற்சிக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென் சீன கடலில் முதல்முறையாக சீன ராணுவத்தின் போா் விமானங்கள் குண்டுவீச்சு பாணியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றன.
இதுதொடா்பாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடா்பாளரும் மூத்த கா்னலுமான தியன் ஜுன்லி வெளியிட்ட அறிக்கையில், ‘கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அந்நிய சக்திகளுடன் பிலிப்பின்ஸ் தொடா்ந்து கைகோத்து வருகிறது.

இந்தச் செயல்பாடுகளை பிலிப்பின்ஸ் உடனடியாக நிறுத்தி, தென் சீன கடற்பகுதியில் பதற்றம் அதிகரிக்காமல் இருக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுவிக்கப்படுகிறது.
தென் சீன கடலில் சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, அமைதி, நிலையான தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், சீன பாதுகாப்புப் படைகள் எப்போதும் உஷாா் நிலையில் இருந்து வருகின்றன.
சீனாவின் இறையாண்மைக்கு எதிராக ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு பிரச்னை அளிக்க நினைத்தால், அது வெற்றி பெறாது’ என்று தெரிவித்தாா்.
தென் சீன கடலில் தாங்கள் உரிமை கோரும் பகுதிகளில் தங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதில் சீன, பிலிப்பின்ஸ் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகள் இடையே அண்மைக்காலமாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனால் அந்தக் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.