கனடாவில் கத்திகுத்து சம்பவம்: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம் – சந்தேக நபர் கைது!
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் ஜான் பகுதியில் திங்கள்கிழமை இரவு இடம்பெற்ற கொடூரமான கத்திகுத்து சம்பவத்தில் 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிங்டன் ரோ (Wellington Row) பகுதியில் இரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

தகவல் கிடைத்து விரைந்து வந்த செயிண்ட் ஜான் பொலிஸார், சம்பவ இடத்தில் காயங்களுடன் இருந்த 36 வயதுடைய சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது, 46 மற்றும் 44 வயதுடைய இரண்டு ஆண்கள் சுயநினைவின்றிப் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர்.
பொலிஸாரும் அங்கிருந்த பொதுமக்களும் அவர்களுக்கு முதலுதவி அளித்து, விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி 46 வயது நபர் உயிரிழந்தார். 44 வயது நபர் தற்போதும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்குச் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 36 வயது நபர் இந்தச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.