4 வாகனங்கள் மோதிக் கொண்டதில் வீடு ஒன்றில் எரிவாயு கசிவு
றொரன்டோவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்ற பகுதியின் வீடு ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு காரணமாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஓல்ட் வெஸ்டன் வீதி மற்றும் ரொக்வெல் அவன்யூ ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதுண்டதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு கசிவு நிறுத்தப்பட்டதன் பின்னர் சில மணித்தியாலங்களில் குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளவும் தங்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினை மேற்கொண்ட வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து காரணமாக குறித்த பகுதி சில மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.