கனடாவில் யூத ஆலயம் மீது துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பெல்லேவில் நகரின் 'சன்ஸ் ஆஃப் ஜேக்கப்' யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காவல் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7:00 மணியளவில், விக்டோரியா மற்றும் பிளீக்கர் அவென்யூஸ் பகுதிக்கு அருகில் உள்ள ஜெப ஆலயத்திற்கு வெளியே ரைபிள் ரக துப்பாக்கியுடன் இருந்த நபருக்கும், அங்கிருந்த காவல் அதிகாரிக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாற்றம் நிகழ்ந்ததாக ஒன்டாரியோவின் சிறப்பு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் சந்தேக நபர் மற்றும் காவல் அதிகாரி ஆகிய இருவருமே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த காவல் அதிகாரியின் படுகாயமடைந்திருந்தாலும் உயிராபத்து கிடையாது எனவும், சந்தேக நபரின் நிலைமை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யூதர்களின் மிக முக்கியமான புனித நாளான 'யோம் கிப்பூர்' இரவில் இச்சம்பவம் நடந்துள்ளதைச் சு பிரதமர் கர்னி சுட்டிக்காட்டியுள்ளார்.
"யூத மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வழிபட உரிமை உண்டு. குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முழுமையான தண்டனை பெறுவதை உறுதி செய்ய கனடா அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தைரியமான காவல் அதிகாரி, அவரது குடும்பத்தினர் மற்றும் ஒன்டாரியோ யூத சமூகத்தினருக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து சிறப்பு விசாரணைப் பிரிவு தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரொறன்ரோ நகரத்தில் உள்ள ஜெப ஆலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் ரோந்துப் பணிகளையும் பாதுகாப்பையும் ரொறன்ரோ பொலிஸார் அதிகரித்துள்ளனர்