அமெரிக்காவுடன் இணைந்தால் இலவச பாதுகாப்பு: ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்த கனடா பிரதமர்
அமெரிக்காவுடன் இணைந்தால் இலவச பாதுகாப்பு அளிப்பதாக ட்ரம்ப் முன்வைத்த ஆஃபரை கனடா நிராகரித்துவிட்டது.
ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாத்துக்கொள்வதற்காக, கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் என்னும் ஒரு திட்டத்தை செயல்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுவருகிறது.
அதற்கு, 175 பில்லியன் டொலர்கள் செலவு பிடிக்கும் என கனக்கிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் என்கிறார் ட்ரம்ப்.
இந்நிலையில், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைய சம்மதித்தால், இந்த கோல்டன் டோம் திட்டத்தில் கனடா இலவசமாக பங்கேற்கலாம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
இல்லையென்றால், கோல்டன் டோம் திட்டத்தில் இணைவதற்கு கனடா 61 பில்லியன் டொலர்கள் செலுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் இலவச பாதுகாப்பு ஆஃபரை நிராகரித்துள்ள கனடா பிரதமரான மார்க் கார்னி, ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடா ஒரு சுதந்திர நாடு என்பதில் பெருமை கொள்கிறது, எங்கள் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.