அமெரிக்காவை மறைமுகமாக சாடிய கனடிய பிரதமர்
அமெரிக்காவின் செயற்பாடுகளை கனடிய பிரதமர் மார்க் கார்னி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகள் சங்க (ASEAN) உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு கார்னி மறைமுகமாக எதிர்வினை அளித்துள்ளார்.

வர்த்தக பேச்சுவார்த்தைகள்
“நாங்கள் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச முறைமையை மதிக்கிறோம். வர்த்தக ஒப்பந்தங்களையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்கிறோம். பொருட்கள், மூலதனம் மற்றும் சிந்தனைகளின் சுதந்திரப் பரிமாற்றத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள், அண்மையில் கனடாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வந்ததாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர்வது கனடா அரசின் பிரதான பொறுப்பாகும். அதுவே சிறந்த வழிமுறையாகும் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகம் “இருதரப்புச் சலுகை அடிப்படையிலான பரிமாற்ற முறை” மற்றும் “பெரும் சக்திகளின் போட்டி காலம்” நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் நம்பகமான கூட்டாளிகளின் அவசியம் அதிகரித்துள்ளதாகவும் கார்னி குறிப்பிட்டுள்ளார்.
நம்பகத்தன்மை கொண்ட நாடாக கனடா தன்னை நிரூபித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா தவிர்ந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை இரட்டிப்பாக்கவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவினங்களை நான்கு மடங்கு உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது இணைய பாதுகாப்பு (Cybersecurity) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் முதலீட்டை அதிகரிக்கக் குறிவைத்துள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.