கனடிய பிரதமர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்
கனேடியப் பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஒரு முக்கிய முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளதாக கனேடிய அரசின் உயர்பதவி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே “ஒப்பந்தம் தயாராக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டதுடன், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் FIPA ஒப்பந்தத்தைக் கடந்தும் மேலும் சில "அடுத்த கட்ட" அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறினார்.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் ஒருவரது பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான விதிமுறைகள் மற்றும் தீர்வு நடைமுறைகளை அமைக்கிறது.
உலகளாவிய வர்த்தகத்திற்கான சவால்கள் அதிகரிக்கும் நிலையில், இத்தகைய ஒப்பந்தங்கள் முக்கியமானவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கார்னி வியாழக்கிழமை அபுதாபியில் அதிபர் ஷேக் முகம்மது பின் சயித் அல் நஹ்யானை சந்தித்து சக்தி வளம், விவசாயம் உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பொருளாதார உறவை விரிவுபடுத்துவது குறித்துப் பேச உள்ளார்.
இந்த பயணம் கார்னியின் வெளிநாட்டு முதலீடுகளை கனடாவுக்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிகள் காரணமாக அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்ட பின்னர், கனடா தனது வர்த்தக கூட்டாளர்களை பன்முகப்படுத்த முயற்சித்து வருகிறது.