இஸ்ரேல் – ஹமாஸ் சமாதானத் திட்டத்திற்கு கனடா ஆதரவு
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குத் தீர்வு காண அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்த புதிய அமைதி திட்டத்துக்கு தனது அரசு முழு ஆதரவு தருவதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை கனடா வரவேற்கிறது.
இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறுவதற்கு அனைத்து தரப்பினரும் பங்காற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முக்கிய அடுத்த படியாக ஹமாஸ் உடனடியாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.மேலும் காசா பகுதியில் தடை இல்லாத, பெருமளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க கனடா தயாராக உள்ளது எனவும் கூறினார்.
அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட 20 அம்ச அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், ஹமாஸ் ஆயுதம் கைவிடுதல் மற்றும் பிடியிலிருக்கும் அனைவரையும் விடுவித்தல், அதற்கு பதிலாக பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குதல் மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பன அடங்கியுள்ளன.
ஆனால், காசா பகுதியில் தனித்த பாலஸ்தீன ஆட்சி உருவாகும் உத்தரவாதம் இத்திட்டத்தில் இடம்பெறவில்லை.
இதேவேளை, கனடா கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபைக்கான முன்னோட்டமாக பாலஸ்தீன் நாட்டை அதிகாரபூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.