தற்கொலைக்கு துாண்டியது; ChatGPT இற்கு எதிராக ஏழு வழக்குகள்
அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏ.ஐ., நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை, 2022ல் அறிமுகப்படுத்தியது. இந்த தளத்தின் மூலம் கேள்வி - பதில் முறையில் அனைத்து விடயங்களையும் அறிந்துக் கொள்ள முடியும் .
அத்தோடு படம் உருவாக்குதல், கோப்புகள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் இந்த தளம் பயன்படுத்தப்படுகின்றது.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குகள்
இந்நிலையில், ChatGPT தற்கொலைக்கு துாண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, சமூக வலைதளத்தால் பாதிக்கப்பட்டோர் சட்ட மையம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஓபன் ஏ.ஐ., நிறுவனம் ChatGPTஎனும் பதிப்பை தகுந்த ஆய்வுகள் இல்லாமல் வெளியிட்டது.
இது முட்டாள்தனமாகவும், மனரீதியாக ஒருவர் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் இருப்பதாக, அந்நிறுவனத்தில் உள்ளேயே எச்சரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாமல் அந்நிறுவனம் குறித்த தளத்தை வெளியிட்டுள்ளது.
இதனால், நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர். அமவுரி லேசி எனப்படும் 17 வயதுடைய பெண், உயிரை மாய்த்துக் கொள்ள கயிற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கூட ChatGPT தெரிவித்துள்ளது.
எனவே, தற்கொலைக்கு துாண்டிய ஓபன் ஏ.ஐ., நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.