கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: ஒருவர் விடுவிப்பு
கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பது.
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு அப்போதே சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.
சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அவர்களில் ஒருவர் அம்மாத் சௌத்ரி. இந்நிலையில், அந்த வழக்கிலிருந்து சௌத்ரி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணியான ரவின் பிள்ளை தெரிவித்துள்ளார்.
என்றாலும், எதனால் சௌத்ரி மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன என்பது குறித்து ரவின் பிள்ளை விளக்கம் அளிக்கவில்லை.
விடயம் என்னவென்றால், கனடா வரலாற்றிலேயே பெரும் பரபரப்பை உருவாக்கிய அந்த கொள்ளைச் சம்பவத்தில், 89,000 டொலர்கள் மதிப்புடைய ஆறு வளையல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள தங்கம் என்ன ஆயிற்று என்பது இதுவரை தெரியவரவில்லை. அது உருக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.