சமூக வலைதளங்கள் மூலம் சிறுவர்களைக் குறிவைத்த நபர் கைது:
கனடாவில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சிறுவர்களைப் பாலியல் நோக்கத்திற்காக வலைவீசித் தேடி வந்த 35 வயது நபரை பீல் பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களைச் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தவறான நோக்கத்திற்காகத் தூண்டிய அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணைத் தொடங்கப்பட்டது.
இந்த விசாரணையின் முடிவில், ஒன்டாரியோவின் மிட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி மரியன் (Stanley Marion) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் தனது அடையாளத்தை மறைக்க பல்வேறு பெயர்களில் சமூக வலைதளக் கணக்குகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 16-ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஸ்டான்லி மரியன் மீது, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களைத் தூண்டியதாக இரண்டு குற்றச்சாட்டுகளும், 18 வயதிற்குட்பட்ட சிறுவரைத் தூண்டியதாக ஒரு குற்றச்சாட்டும் என மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"குற்றம் சாட்டப்பட்ட நபர் இணையம் வாயிலாக இன்னும் கூடுதலான சிறுவர்களைத் தொடர்பு கொண்டிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று காவல்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.