16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது.
அங்கு தற்போது நள்ளிரவை கடந்துள்ள நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அபராதம்
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட ஐந்து மில்லியன் குழந்தைகளும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகளும் உள்ளனர். சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார்.
இதைத் தடுக்க, 'இணையவழி பாதுகாப்பு திருத்தச் சட்டம் கடந்த வருடம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, 'டிக்டொக், எக்ஸ், மெட்டா' ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.